இங்கிலாந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்குகிறது.
தற்போது சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி காணொலி மூலம் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
விராட் கோலி இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். குழந்தை பிறந்த மகிழ்ச்சி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது ஆகிய காரணங்களால் கோலி உற்சாகமாக இருப்பார். கோலிக்கு இந்திய ஆடுகளத்தில் எந்த பலவீனமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இதையெல்லாம் நினைக்கும் போது கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம், எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் என தெரியவில்லை என்று தெரிவித்தார்.