Tamilவிளையாட்டு

கோலிக்கு ஆதரவு தெரிவித்த இன்சமாம்!

நியூசிலாந்து தொடர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் மோசமான வகையில் அமைந்தது. டி20, ஒருநாள், டெஸ்ட் என மொத்தமாக 11 இன்னிங்சில் விளையாடினார். இதில் ஒன்றில் மட்டுமே அரைசதம் அடித்தார்.

குறிப்பாக டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்சில் 38 ரன்களே அடித்தார். கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் இன்-ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவருக்கு இன்-ஸ்விங் பந்தை சரியாக எதிர்கொள்ள தெரியவில்லை என ‘டெக்னிக்’ குறித்து விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் 70 சதங்கள் அடித்தபின் விராட் கோலியின் டெக்னிக் குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நான் அவருக்கு சொல்லும் ஆலோசனை ஏதாவது இருந்தால், அது கவலைப்பட வேண்டாம் என்பதுதான். இது கடந்து போகும். ‘டெக்னிக்’ குறித்து கூட பேச விரும்பவில்லை. டெக்னிக்கை மாற்றிக் கொள்ளக்கூடாது. அவர் வலிமையான மனநிலை கொண்ட வீரர். அவர் கலங்கி விடக்கூடாது.

பெரிய வீரர் வலிமையான மனநிலையை பெற்றிருப்பார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும். விராட் கோலி பழைய நிலைக்கு திரும்புவார். கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே சயீத் அன்வர் மற்றும் கங்குலி சிறப்பானவர்கள். உங்களுடைய வலிமை கூட பலவீனமாக மாறலாம். அதனால் நீங்கள் எப்படி ரன்கள் குவிக்கிறீர்களோ, அதே நிலையில் செல்ல வேண்டும்’’ என்றார்.

சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 70 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *