கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற திட்டம்?

கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே மிகப் பெரிய மார்க்கெட் என்று பெயர் பெற்றது. இந்த மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. புதிதாக மார்க்கெட் அமையும் இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், பொழுதுபோக்கு இடம் என்று பிரமாண்டமாக வடிவமைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

இதற்காக சி.எம்.டி.ஏ. வால் நியமிக்கப்பட்டுள்ள உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் மற்றும் வேக் பீல்டு நிறுவனத்திடம் மார்க்கெட்டை திருமழிசையில் பிரமாண்டமாக கட்டுவதற்கான வடிவமைப்பை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

மார்க்கெட்டை முழுவதுமாக திருமழிசையில் அமைக்கலாமா? பாதியை அங்கு கொண்டு செல்வதா? என்று எல்லா சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் கடைகளை மொத்த வியாபாரிகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். இனி அவர்களை திருமழிசைக்கு மாற்றும் போது அதற்கான இழப்பீடு தொகையையும் வழங்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது. வியாபாரிகளின் உரிமையை பாதுகாத்து அவர்களுக்கு சரியான இழப்பீட்டையும் வழங்கும் போது தாமாகவே இடம் பெயர ஒத்துக் கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.

திருமழிசையில் மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதம் அல்லது 29.75 ஏக்கர் நிலப்பரப்பு திறந்தவெளிகள், பூங்காக்கள், சாலைகள் அமைக்க ஒதுக்கப்படுகிறது. கோயம்பேட்டில் கனரக வாகனப் போக்குவரத்து, பாதசாரிகள் நடமாட்டம் காரணமாக நெரிசலாகிவிட்டது. எனவே இந்த பகுதியை சில்லரை விற்பனை மற்றும் ஓட்டல்களுக்கு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து உள்ளனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் இருந்து வருபவர்களை கவரும் இடமாக கோயம்பேடு மாறும். கோயம்பேட்டை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் முதல் மற்றும் 2-ம் பகுதியின் இணைப்பிடமாக இருக்கிறது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம். கோயம்பேடு மார்க்கெட் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவிடுகிறது. ஆனால் லாபம் ரூ.30 லட்சம் மட்டுமே கிடைக்கிறது. எனவே மார்க்கெட்டை நவீனப்படுத்துவது, புதிய வசதிகளை உருவாக்குவதன் மூலம் கூடுதல் வருவாயும் ஈட்ட முடியும் என்று ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

நுழைவு கட்டணம், வாகன நிறுத்தக்கட்டணம், திறந்த வெளிப்பகுதிகள் மூலம்தான் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. கோயம்பேடு உள்பட சென்னையின் வடமேற்கு பகுதிகளில் பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. திருமழிசையில் புதிய மார்க்கெட்டை உருவாக்குவது, கோயம்பேட்டை நவீன மயமாக்குவது மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news