கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 500 பேருக்கு தடுப்பூசி – மாநகராட்சி கமிஷ்னர் அறிவிப்பு
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் மளிகை, காய்கறி, பழம், பூ மொத்த மற்றும் சிறு மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மார்கெட் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக மூடப்பட்டு இருந்தது. காய்கறி, பழம், பூ மார்க்கெட் ஆகியவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
6 மாத இடைவெளிக்குப் பின்னர் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு மார்கெட், தற்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது.
சில்லரை வியாபாரிகள் மட்டுமே சந்தைக்குள் பொருட்கள் வாங்கி செல்ல அனுமதிக்கபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
தனியார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களும் மார்கெட் வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பழ மார்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளை தவிர்த்து சிறு மொத்த விற்பனை கடைகள் தினசரி 30 சதவீதம் அளவுக்கே சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை மூலம் மார்கெட் வளாகத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா விதிமுறைகளை மீறும் வியாபாரிகளிடம் பறக்கும் படை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டை போல கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா பரவி விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள மினி கிளினிக்கில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
ஆனால் தடுப்பூசி போடுவதில் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. கடந்த 3 மாதங்களாக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையிலும் இதுவரை வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 5 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் சுஞ்சொங்கம் ஜடக் சிரு ஆகியோர் கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் இன்று ஆய்வு செய்தனர்.
அப்போது மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர்.
மேலும் வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுகிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், மாநகராட்சி சுகாதார துறையினர் உடனிருந்தனர்.
பின்னர் பழ மார்க்கெட் வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமை ககன்தீப்சிங்பேடி தொடங்கி வைத்தார். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் பற்றி மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் பேட்டி அளித்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 500 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது போன்று தொடர்ச்சியாக தடுப்பூசி போட்டு வந்தால், 20 நாட்களில் மார்க்கெட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியை போட்டுவிட முடியும்.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கழிவறைகளையும் ஆய்வு செய்தோம். அனைத்து கழிவறைகளிலும் தண்ணீர் வசதி இருக்கிறது.
இருப்பினும் கழிவறை வசதிகளை மேலும் சீரமைக்க வேண்டி உள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கூடுதலான வசதிகளை விரைவில் மேற்கொள்ள உள்ளோம்.
கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருக்கக் கூடாது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் மார்க்கெட்டை சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் இனி கண்காணிப்பார்கள். கூட்ட நெரிசலை குறைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறியதாக மே மாதம் மட்டும் ரூ.1.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் சுற்றிய 11 ஆயிரம் பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 700 பேருக்கும் அபராதம் விதித்துள்ளோம்.
மார்க்கெட்டில் நோய் பரவலை தடுக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளனர்.
இவ்வாறு ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.