கோயம்பேடு மார்கெட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை தொடங்கியது

ஆயுத பூஜை பண்டிகை வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் ஆகிய முக்கிய பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை மூலம் பொருட்கள் விற்பனை செய்வது வழக்கம்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாக குழு சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ளதால் ஏற்கனவே கோயம்பேட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு சந்தை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது ஆயுத பூஜை பண்டிகைக்கும் சிறப்பு சந்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்காக அங்காடி நிர்வாக குழு சார்பில் நேற்று முன்தினம் ஏலம் நடத்தி ஒதுக்கீடுக்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடங்கி உள்ளது.

இதையொட்டி மதுரை, திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100 லாரிகளில் அவல், பொரி, கடலை, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வந்து குவிந்து உள்ளன. வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனைக்கு தயாராகி வருகின்றனர். நாளை (1-ந் தேதி) இரவு முதல் வாழை கன்றுகள், தோரணங்கள், பூசணிக்காய், வாழைத்தார், பழங்கள் அதிகஅளவில் லாரிகளில் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னரே ஆயுத பூஜை விற்பனை களை கட்டும்.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதை பயன்படுத்தி சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களையும் எளிதாக வாங்கி செல்ல முடியும். இதனால் இந்த ஆண்டு சிறப்பு சந்தையில் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆயுத பூஜை சிறப்பு சந்தையில் உள்ள கடைகளுக்கு அளவை பொறுத்து நாள் ஒன்றுக்கு ரூ.65 முதல் ரூ.360 வரையும், அதேபோல் மினி வேனுக்கு ரூ.650, லாரிக்கு ரூ.1300 என நாள் வாடகையாக அங்காடி நிர்வாக குழு சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக ஏலதாரரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

சிறப்பு சந்தையை தவிர்த்து மார்க்கெட் வளாகத்தில் உள்ள வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து விற்பனை செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. அதேபோல் மார்க்கெட் வளாகத்தில் வாகனங்களில் வைத்து பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களிடம் ரூ.10ஆயிரம் வரை அபராதம் வசூல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools