’கோமாளி’ -திரைப்பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில், ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘கோமாளி’ எப்படி என்று பார்ப்போம்.
பள்ளி மாணவரான ஜெயம் ரவி, 1996 ஆம் ஆண்டு விபத்து ஒன்றால் கோமாவுக்கு சென்றுவிடுகிறார். 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருக்கு நினைவு வர, அவர் பார்க்கும் அனைத்தும் புதிதாக இருக்கிறது. இந்த 16 வருடத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தடுமாறும் ஜெயம் ரவி, அதனால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அவற்றை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும் தான் ‘கோமாளி’ படத்தின் கதை.
முழுக்க முழுக்க கமெர்ஷியல் பாணியில் கலகலப்பான காமெடி ட்ரீட்டாக படம் அமைந்திருக்கிறது. நகைச்சுவை என்றாலும், நமது வாழ்க்கை முறை மாற்றம் குறித்து நம்மை இயக்குநர் சிந்திக்கவும் வைக்கிறார்.
ஜெயம் ரவி, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பள்ளி மாணவர் வேடத்திற்கும் பொருந்தி போகிறவர், 16 ஆண்டுகள் கோமாவில் இருந்துவிட்டு மீண்டு வந்தவராக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
காஜல் அகர்வால், படத்திற்கு தேவையே இல்லாத ஒரு பீஸாக இருக்கிறார். இருந்தாலும், ஹீரோயின் என்ற இடத்தை நிரப்புவதற்காக அம்மணி வருகிறார். சம்யுக்தா ஹெக்டேவும் அதே ரகம் தான்.
வில்லனாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரின் அனுபவ நடிப்பு ரசிக்க வைக்கிறது. யோகி பாபு காமெடி காட்சிகள் அனைத்தும் அப்ளாஷ் பெறுகிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணி இசை சூப்பர். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் படம் கலர் புல்லாக இருக்கிறது.
கமர்ஷியல் மசாலா படம் என்றாலும், ரசிகர்களின் மனதை தொடும் விதத்தில் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், வாழ்க்கையின் ஓட்டத்தில் நமக்கு உண்மையான சந்தோஷம் கொடுக்கும் விஷயங்களை நாம் எப்படி இழக்கிறோம், என்பதை ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறார்.
லாஜிக்கை தவிர்த்துவிட்டு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், படத்தின் காட்சிகள் ரசிக்க வைப்பதோடு, நம்மை சிந்திக்கவும் வைக்கிறது.
மொத்தத்தில், படத்தின் தலைப்பு ‘கோமாளி’ யாக இருந்தாலும், அதன் மூலம் சொல்லியிருக்கும் விஷயமும், சொல்லப்பட்ட விதமும் புத்திசாலித்தனமாகவே இருக்கிறது.
-விமர்சன குழு