X

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் – கொலம்பியாவை வீழ்த்தி பெரு வெற்றி

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் கோய்னியாவில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான பெரு-கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 17-வது நிமிடத்தில் பெரு அணி வீரர் செர்ஜியோ பெனா கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பின்பாதியிலும் இரு அணியினரும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். 53-வது நிமிடத்தில் கொலம்பியா அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் மிகுல் போர்ஜா கோல் போட்டார். 64-வது நிமிடத்தில் பெரு அணிக்கு மீண்டும் ஒரு கோல் கிட்டியது. கார்னர் வாய்ப்பில் பெரு அணி வீரர் கோலை நோக்கி அடித்த பந்தை கொலம்பியா அணியின் பின்கள வீரர் யெர்ரி மினா தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரது நெஞ்சில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பெரு அணி தனது முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் சரண் அடைந்து இருந்தது. கொலம்பியா அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். தொடக்க லீக் ஆட்டத்தில் ஈகுவடாரை வீழ்த்தி இருந்த அந்த அணி அடுத்த ஆட்டத்தில் வெனிசுலாவுடன் டிரா கண்டு இருந்தது. 2011-ம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டிக்கு பிறகு பெரு அணி கொலம்பியாவை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.

இதேபிரிவில் ரியோடிஜெனீரோவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் வெனிசுலா-ஈகுவடார் அணிகள் மோதின. ஈகுவடார் அணியினரின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் (69 சதவீதம்) வலம் வந்தாலும் வெனிசுலா அணியினர் எல்லா வகையிலும் எதிரணிக்கு கடும் சவால் அளித்தனர்.

39-வது நிமிடத்தில் ஈகுவடார் அணி வீரர் அர்டோன் பிரிசியாடோ கோல் அடித்தார். வெனிசுலா அணி 51-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் எட்சன் கேஸ்டிலோ இந்த கோலை அடித்தார். இதனை அடுத்து ஈகுவடார் அணியினர் தங்கள் ஆட்ட வேகத்தை அதிகப்படுத்தினர். இதன் பலனாக 71-வது நிமிடத்தில் ஈகுவடார் அணி வீரர் கோன்ஜாலோ பிளாட்டா அபாரமாக கோல் அடித்தார். ஈகுவடார் அணி வெற்றியை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் வெனிசுலா வீரர் ரொனால்டு ஹெர்னாண்டஸ் தலையால் முட்டி கோல் அடித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

முதலாவது லீக் ஆட்டத்தில் பிரேசிலிடம் தோல்வி கண்ட வெனிசுலா அணி, கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலின்றி டிரா செய்து இருந்தது. ஈகுவடார் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கொலம்பியாவிடம் தோற்று இருந்தது.