Tamilசெய்திகள்

’கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று என் கல்லறையில் எழுதுங்கள் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சட்டசபையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, சிறிது நேரம் உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை, நீண்ட நெடுங்காலம் எங்கள் கட்சியில் இருந்தவன் நான். இன்னும் இருக்கப்போகிறவன். என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். மறைந்துவிட்ட அன்றைக்கு, என்னை புதைக்கின்ற சமாதியில் ஒரு வரி எழுதினால் போதும், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதியிருந்தால் போதும். என் தலைவர் கருணாநிதிக்கு கோபாலபுரத்து விசுவாசியாகவே வாழ்ந்தேன். இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

(இந்த நேரத்தில் சபாநாயகர் அப்பாவு, ”இன்னும் 100 ஆண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்” என்றார்) தொடர்ந்து துரைமுருகன் பேசியதாவது:-

நிச்சயமாக. அதையும் சொல்லி விடுகிறேன். நானும், முதலமைச்சரும், கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள சென்றோம். அப்போது எனது வயது பற்றி கவர்னர் கேட்டார். அதற்கு முதலமைச்சர், எனது அப்பாவுடனேயே 53 ஆண்டுகள் கூடவே இருந்தவர், இப்போது என்னுடன் இருக்கிறார் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் அந்தப் பக்கம் அமர்ந்திருந்தார். நான் கவர்னரிடம் உதயநிதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருடனும் நான்தான் இருப்பேன் என்றேன். உங்களுடைய வயது என்ன என்று கேட்டார். நான் உறுதியாக 100 வயதை கடப்பேன் என்று கூறினேன்.

அதையும் சொல்லிக்கொடுத்தது எங்கள் தலைவர் கருணாநிதி தான். என்றைக்குமே தனக்கு வயது ஆகிவிட்டது என்று நினைக்கக்கூடாது என்பார். இளமையாக இருக்க வேண்டும் என்பார். அதனால், 100 வயது வரை நிச்சயமாக இருப்பேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ”எல்லோருடைய வாழ்த்தும் உங்களுக்கு இருக்கிறது” என்றார்.

அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

* சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக கொசஸ்தலையாறு உப வடிநிலத்திற்கு உட்பட்ட மாதவரம் ரெட்டேரியை குடிநீர் ஆதாரமாக மாற்ற ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்படும். இந்த ஏரியை மேம்படுத்தி, இந்த குளத்தின் கொள்ளளவு 32 மில்லியன் கன அடியில் இருந்து 62 மில்லியன் கன அடியாக உயர்த்தப்பட்டு குடிநீர் தேவைக்காக கூடுதலாக 30 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட உள்ளது.

* செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், பாதிக்கப்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நீண்ட கால அடிப்படையிலான 2 வெள்ளத் தடுப்பு பணிகள் ரூ.106 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* அத்திக்கடவு – அவினாசி திட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு துரைமுருகன் அறிவித்தார்.