தேனி நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து தெலுங்கான கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை மேதகு கவர்னர் என அழைப்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதையே விரும்புவேன். இப்பகுதி மக்களின் தாகம் தீர்க்க அன்றே காமராஜர் வைகை அணையை கட்டினார்.
அவரது புகழ் இன்று வரை நிலைத்து நிற்கிறது. பொதுவாக மற்ற பணிகளை காட்டிலும் அணை கட்டுவதில் பல பிரச்சினைகள் உள்ளது. ஆனால் காமராஜர் அணையை திறம்பட கட்டி முடித்து திட்ட மதிப்பீட்டு நிதியில் மிச்சம் வைத்தார். நேர்மையான அரசியல் செய்பவர்களால் மட்டுமே இது சாத்தியம்.
இந்த வயதில் கவர்னர் ஆவதில் என்ன விருப்பம் என்று கேட்கின்றனர். நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். எனக்கும் பூ வைப்பது, வளையல், ஜிமிக்கி அணிவது பிடிக்கும். ஆனால் எனக்கு கொடுத்த பணியை அசாதாரணமாக செய்து முடிக்கும் துணிச்சல் உள்ளது.
மாணவர்களாகிய உங்களிடமும் அந்த சக்தி உள்ளது. பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் தூய்மையான ஆட்சியை தர முடியும்.
கோதாவரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். நான் தமிழகத்தின் மகள் என்ற முறையில் இந்த முயற்சிக்கு பக்கபலமாக இருப்பேன். தெலுங்கானா, ஆந்திர முதல்வர்களிடம் தமிழகத்திற்குரிய தண்ணீர் தர வேண்டும் என கேட்பேன். அவர்களின் கூட்டு முயற்சிக்கு நான் உதவுவேன். காமராஜரின் தூய்மை, நேர்மை அரசியலை பார்த்து வளர்ந்த என்னால் கடும் உழைப்பால் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்தது என்றார்.