கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 29- ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதத்திலேயே அதிகமாக இருந்ததால் தேர்வுகள் முன் கூட்டியே முடிக்கப்பட்டன. வழக்கமாக கோடை விடுமுறை மே மாதம் மட்டும் விடப்படும்.
ஜூன்-1 அல்லது 2-ந்தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும். அது போல இந்த ஆண்டும் ஜூன் 1- ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்ளில் வெப்ப அலை வீசியதால் பள்ளி திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோரிடம் இருந்து வந்தது.
இதையடுத்து ஜூன் 7- ந்தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வார காலம் தள்ளி வைக்கப்பட்ட போதிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசியது. இது பள்ளி குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்பதால் கல்வித்துறை பள்ளி திறப்பை மேலும் ஒரு வாரம் தள்ளி வைத்தது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்றும் (12-ந்தேதி) 1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு 14- ந் தேதியும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதன்படி இன்று அனைத்து பள்ளி கூடங்களும் திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
இந்த வருடம் மாணவ- மாணவிகளுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை கிடைத்தது. நீண்ட நாட்கள் விடுமுறையில் வீடுகளில் முடங்கியதால் பள்ளி எப்போது திறக்கும் என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு செல்லும் மாணவ- மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வகுப்புகளுக்கு சென்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. அரசின் சார்பில் விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் புதிய புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்றனர்.
வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதனை வழங்கினார்கள். இதே போல் சீருடையும் வழங்கப்பட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. சி.பி.எஸ்.இ. வகுப்புகளும் தொடங்கின. சென்னையில் அரசு மற்றும் மாநகராட்சி மூலம் நடத்தப்படும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன.
விருகம்பாக்கம் அரசு ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளை வரவேற்றார். உற்சாகத்துடன் வந்த மாணவிகள் அவரவர் வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததால் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்பட்டது.
மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார். இதே போல் எல்லா பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்தனர். நண்பர்கள், ஆசிரியர்களை சந்தித்து மனம் விட்டு பேசினர்.
முதல் நாள் என்பதால் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டதால் பாடங்கள் நடத்தப்படவில்லை. மேலும் பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ- மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.