கடந்த காலங்களில் உலகில் பல நாடுகளில் சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்கள் தாக்கியபோது இந்தியாவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
அதற்கு இந்தியாவில் நிலவிய வெப்பம் தான் காரணம் என்று கூறப்பட்டது. இங்கு அதிக வெப்பநிலை நிலவியதால் அந்த கிருமிகளால் தாக்குபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதேபோல தற்போது பரவி வரும் கொரோனா வைரசும் வெப்பநிலையை தாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று நிபுணர்கள் பலரும் தெரிவித்தனர்.
தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கிறது. போகப்போக வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும். எனவே கொரோனா பரவுவது நின்றுவிடும் என்று அவர்கள் கணித்து கூறினார்கள்.
ஆனாலும் இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். வருகிற 6-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை இலாகா கூறி இருந்தது.
ஆனால் 2 ல் இருந்து 5 டிகிரி வரை குறைவான வெப்பநிலையே பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. குறிப்பாக வடமேற்கு, மேற்கு, மத்திய பகுதி, தென்னிந்தியா ஆகியவற்றில் வெப்பநிலை குறைவாக உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் 3-ல் இருந்து 4 டிகிரி வரை வெப்பநிலை குறைவாகவே இருக்கிறது.
பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் மார்ச் 5-ல் இருந்து 7-ந்தேதி வரை மழை பெய்யும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது.
கிழக்கிந்திய பகுதியான பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த பகுதிகளில் எல்லாம் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும் வரை கொரோனா போன்ற நோய்கள் தாக்குதல் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இன்னும் சில நாட்களில் வெப்பநிலை மிக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அப்போது அதன் பரவுதல் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றனர்.