Tamilசெய்திகள்

கோடிக்கணக்கான பணத்துடன் சென்ற கண்டெய்னர் லாரி விபத்து – கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணக்கட்டுகள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு சென்றது. கண்டெய்னர் லாரியில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கண்டெய்னர் லாரிக்கு முன்னும் பின்னும் 2 வாடகை கார்களில் கடலூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு வாகனங்களுடன் கண்டெய்னர் லாரி புதுச்சேரி மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே முன்னால் பாதுகாப்புக்கு போலீசார் சென்ற காரின் டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார்.

இதனால் பின்னால் கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்த போலீசார் உயிர்தப்பினர். அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயுடன் விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களும் போலீசார் நடுரோட்டில் துப்பாக்கியுடன் நிற்பதை கண்டு என்ன ஏதேன்று விசாரிக்க தொடங்கினார்கள்.

சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அதில் ஏறி, கண்டெய்னர் லாரியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.