இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 215 பேர் உயிரிழந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இவற்றில் சில சம்பவங்கள் தற்கொலப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொழும்புவின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே போலீசார் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.