Tamilசெய்திகள்

கொல்லம், குருவாயூர், ராமேஸ்வரம் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தமிழ் புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர். முக்கிய ரெயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை 300-ஐ கடந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்த்து ரெயில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 12, 13, 14, 15, ஆகிய தேதிகளில் தெற்கு ரெயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்கப்பட்டன. இதனால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு உறுதியாகி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் ராமேசுவரம்- எழும்பூர், மங்களூர்-எழும்பூர், எழும்பூர்-காரைக்கால், காரைக்கால்-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில், நாகர்கோவில்-தாம்பரம், மதுரை- சென்ட்ரல், துரந்தோ விரைவு ரெயில் ஆகியவற்றில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக
சேர்க்கப்பட்டுள்ளது.

எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-ராமேஸ்வரம், தஞ்சாவூர்-எழும்பூர், சென்ட்ரல்- திருவனந்தபுரம் உள்ளிட்ட 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 20-ந்தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது.

இதேபோல கொல்லம்- எழும்பூர், குருவாயூர்- எழும்பூர் உள்பட 5 ரெயில்களில் 21-ந்தேதி வரை கூடுதலாக தூங்கும் வசதி பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.