X

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பின்னர் 180 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

11-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிப்பதுடன் முந்தைய லீக்கில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தது. பஞ்சாப் அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

இந்த நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.