கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜினாமா – தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவருக்கு இன்னும் பதவிக்காலம் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தெரிவித்து விட்டதாகவும், மரியாதை நிமித்ததமாக தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானத்தை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் தலைமை நீதிபதியை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். மரியாதை நிமித்தமாக அவர் சந்திக்க இருக்கிறேன். நான் ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுப்பி விட்டேன்.எனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால் அந்த இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதில் இருந்து பின்வாங்கிவிட்டேன். இரண்டு மணிக்கு எனது வீட்டில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இருக்கிறேன். 2 மணிக்கு அங்கே வாருங்கள் (பத்திரிகையாளர்களை பார்த்து)” என்றார்.

கங்கோபாத்யாய் மேற்கு வங்காளம் மாநிலத்தின் தம்லுக் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடலாம் என யூக செய்திகள் வெளியாகியுள்ளது. 2009-ல் இருந்து தம்லுக் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது.

பா.ஜனதாவுக்கு செல்வதற்கு முன்னதாக மம்தா பானர்ஜியின் வலது கை என அறியப்பட்ட சுவேந்து அதிகாரி தம்லுக் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஜித் கங்கோபாத்யாய், மற்றொரு நீதிபதியை அரசியல் கட்சிக்காக வேலை பார்ப்பதாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

பல்வேறு வழக்குகளில் மாநில அரசுக்கும் இவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools