கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின் கடை நிமிட ஆடியோ வெளியானது

துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு கொலை செய்யப்பட்டார். முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து சி.என்.என். டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

அந்த ஆடியோ டேப்பில், ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என ஜமால் கசோக்கி கூறியதை கேட்க முடிகிறது. மேலும் ஜமால் கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்து கொலையாளிகள் தொடர்ந்து செல்போனில் தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்ததும் தெரிகிறது. ஜமால் கசோக்கி இறந்த பின்னர் அவரது உடலை ரம்பம் மூலம் அறுத்து கூறுபோடும் சத்தமும் ஆடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த ஆடியோ பதிவு மூலம் ஜமால் கசோக்கி திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டார் என்பது உறுதியாகி இருப்பதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஜமால் கசோக்கியின் கடைசி தருணம் பற்றி தகவல்கள் பரிமாறப்பட்ட செல்போன் அழைப்புகள் அனைத்தும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்ததை துருக்கி உளவுத்துறை அமைப்புகள் உறுதி செய்து உள்ளன.

இவ்வாறு சி.என்.என். டெலிவிஷனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சால்மானின் நெருங்கிய கூட்டாளிகள் 2 பேரை துருக்கிக்கு நாடு கடத்த வேண்டும் என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்து விட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools