சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே உள்ள சேஷமா நாயுடுகண்டரிக கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா (வயது50). இவருக்கு இதயத்துடிப்பு அதிகரித்ததால் கடந்த சனிக்கிழமை திருப்பதியில் உள்ள ரூயா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு ரத்த பரிசோதனை செய்தனர்.
அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக டாக்டர்கள் கூறினர். 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பாலகிருஷ்ணா தனது கிராமத்திற்கு சென்றார்.
இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் தாக்கி விட்டதாகவும், தன் அருகில் யாரும் வரவேண்டாம் என்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
அதை மீறி அவர் அருகில் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்கி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலகிருஷ்ணாவின் குடும்பத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் என பயந்த அவர் தனது நிலத்தில் தாயாரின் சமாதி அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த பாலகிருஷ்ணாவுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.