Tamilசெய்திகள்

கொரோனா 3 வது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலை முடிந்தபின், 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. தற்போது கொரோனா 2-வது அலையில் இருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மறுபக்கம் 3-வது அலை தாக்கலாம் என வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் வெளியில் செல்லும்போது தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநில சுற்றுலாத் தலமான மணாலி, முக்கிய நகரங்களில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமல் கொரோனா பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வே இல்லாமல் கூட்டமாக கூடியிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவத் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா 3-வது அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சுற்றுலா தலங்கள், யாத்திரைகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.