கொரோனா 3-வது அலை வந்தாலும், அது மோசமானதாக இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். அதிகமானோர் தடுப்பூசி போட்டதால், தினசரி பாதிப்பு குறைந்து விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில், கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3-வது அலை, கடந்த அக்டோபர் அல்லது இந்த மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று பெரும்பாலான தொற்றுநோய் நிபுணர்கள் கணித்து இருந்தனர்.
தசரா பண்டிகை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுவதால், அதன்பிறகு 3-வது அலை உருவெடுக்கும் என்று அவர்கள் கருதினர்.
ஆனால், அவர்களின் கணிப்புகள் பொய்த்து போயுள்ளன. தீபாவளி முடிந்து 3 வாரங்கள் நிறைவடைய உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே, கொரோனாவின் மோசமான காலகட்டத்தில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் மேனன் கூறியதாவது:-
கொரோனா 2-வது அலையில் ஏராளமான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். அதனால் அவர்களுக்கு இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தது. பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், ‘ஹைபிரிட் இம்யூனிட்டி’ எனப்படும் கலப்பு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தது.
கொரோனா தாக்காதவர்கள், தடுப்பூசி போட்டதால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை விட இவர்களுக்கு கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அத்துடன், தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால், தினசரி பாதிப்பு குறைவாக உள்ளது.
கொரோனா 3-வது அலை உருவாகுமா என்பதை கணிக்க முடியாது. இருப்பினும், அப்படி வந்தாலும், 2-வது அலை போன்று மோசமானதாக இருக்காது.
குளிர்காலம் தொடங்குவதால், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம். எனவே, எல்லோரும் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைரஸ் நோய் சிகிச்சை நிபுணர் அனுராக் அகர்வால் கூறியதாவது:-
2-வது அலையில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், தற்போது தடுப்பூசி அதிக அளவில் போட்டு வருவதும் தினசரி பாதிப்பு குறைவாக இருப்பதற்கு காரணங்கள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் இயற்பியல் பேராசிரியர் சீதாப்ரா சின்கா கூறியதாவது:-
ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கே நடப்பது இந்தியாவில் எதிரொலிப்பது வழக்கம். ஆனால், இந்த தடவை அப்படி நடக்காது. அப்படி நடப்பதாக இருந்தால், ஏற்கனவே அறிகுறி தெரிந்து இருக்கும்.
ஒருவேளை 3-வது அலை வந்தால் கூட மென்மையானதாகவே இருக்கும். 3-வது அலை இப்போதைக்கு வருமா என்று கேட்டால், எந்த மாதிரியான ஆய்வும் இதை உண்மையிலேயே கணிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.