X

கொரோனா 2வது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவி

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்களாக சூறாவளியாக சுழன்றடித்து வருகிறது. இந்த கொடூர தொற்றுக்கு எதிரான மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என சிகிச்சைக்கான உபகரணங்களில் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், மக்களை மீட்க வழி தெரியாமல் சுகாதாரத் துறை திணறி வருகிறது.

நாளுக்கு நாள் தொற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அதை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இதனால் மக்களின் பாடு பெரும் திண்டாட்டமாகி வருகிறது.

எனவே கொரோனாவால் இந்தியா சந்தித்து வரும் பயங்கர சூழலை எதிர்கொள்வதற்கு பல உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளன. குறிப்பாக மருந்து பொருட்கள், சிகிச்சைக்கான தளவாடங்களை அனுப்பி வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டரில், கொரோனாவின் தொடக்க காலத்தில் அமெரிக்க ஆஸ்பத்திரிகள் தவித்து வந்தபோது இந்தியா உதவியதுபோல, தற்போது அவர்களுக்கு தேவை ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியிருந்தார்.

இதுபோல துணை அதிபர் கமலா ஹாரிஸ், கொரோனாவின் பயங்கரமான சூழலில் இந்தியாவுக்கு கூடுதல் உதவிகள் மற்றும் வினியோகங்களுக்காக இந்திய அரசுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இந்தியாவுக்காகவும், அதன் தீரமிக்க சுகாதார பணியாளர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய சுகாதார பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யுமாறு பெண்டகன் அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ஆஸ்டின் லாயிடு உத்தரவிட்டார்.

இந்த போராட்டத்தை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தும். சிகிச்சைக்கான உபகரணங்களை கொண்டு செல்வதற்கான தளவாடங்களையும் அடுத்த சில நாட்களில் வழங்குவோம். மேலும் இந்தியாவுக்கு உதவுவதற்காக அமெரிக்காவின் பிற துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை உடனடியாக இந்தியாவுக்கு வழங்க இருப்பதாகவும், அமெரிக்காவின் உபரி தடுப்பூசிகளையும் இந்தியாவுக்கு வழங்குவதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியிருப்பதால் தடுப்பூசி மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க முடியாது என அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு பைடனின் ஜனநாயக கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. மேலும் இந்தியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் இருந்தும் பைடன் நிர்வாகத்துக்கு கோரிக்கைகள் எழுந்ததை தொடர்ந்து இந்த உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

மேலும், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியுதவி அறிவித்து உள்ளார். அத்துடன் தொற்று பரவல் தொடர்பான முக்கிய தகவல்களை இந்தியாவுக்கு வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி நாதெல்லாவும் தங்கள் வளங்கள், தொழில்நுட்பங்களை மீட்பு நடவடிக்கைகளுக்கும், ஆக்சிஜன் உள்ளிட்ட சிகிச்சை சாதனங்கள் வாங்குவதற்கும் இந்தியாவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மற்றொரு இந்திய வம்சாவளி தொழிலதிபரான வினோத் கோஸ்லாவும் உதவி அறிவித்துள்ளார். குறிப்பாக ஆக்சிஜன் இறக்குமதி மற்றும் வினியோகத்துக்காக இந்திய ஆஸ்பத்திரிகளுக்கு நிதியுதவி வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு அமீரகமும் தனது ஆதரவை அளித்திருக்கிறது. இதை வெளிப்படுத்தும் வகையில் அங்குள்ள புர்ஜ் கலீபா உள்ளிட்ட முக்கியமான கட்டிடங்களில் இந்திய தேசியக்கொடி வண்ணத்தில் விளக்குகளை ஒளிரவிட்டுள்ளது.

மேலும் சிங்கப்பூர், சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுக்கு உதவிகளை வழங்கியும், அறிவித்தும் வருகின்றன.

இவ்வாறு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு பல நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன. இந்த உதவிகள் விரைவில் இந்தியாவை வந்தடைந்து கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா வெல்ல உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.