X

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பது பெருமை! – டொனால்ட் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று உலகமெங்கும் 50 லட்சத்து 36ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்றும், இந்த நோய் தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்து விட்டது என்றும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவு கூறுகிறது.

அமெரிக்காவை பொறுத்தமட்டில், பிற எந்த நாட்டையும் விட தொடர்ந்து அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 93 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கொரோனா பரிசோதனை அளவிலும் அமெரிக்காதான் முதல் இடம் வகிக்கிறது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 1 கோடியே 26 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார். இதையொட்டி அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் பேசியபோது கூறியதாவது:-

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோய் தொற்று நோயாளிகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதுவும் ஒரு கவுரவம் தான்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், ஒரு சிறப்பு விஷயமாக இதை நான் பார்க்கிறேன். ஏனென்றால் நமது கொரோனா வைரஸ் பரிசோதனை மிக சிறப்பாக இருக்கிறது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஏனென்றால் மற்றவர்களை விட நாம் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா பரிசோதனையை செய்து வருகிறோம். எனவே அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளை கொண்டிருப்பதை மோசமான காரியமாக நான் பார்க்கவில்லை. உண்மையிலேயே இது ஒரு கவுரவம்தான்.

இது நமது பரிசோதனை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் செய்த அனைத்து வேலைகளுக்கும் கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.