இந்தியாவில் கொரோனா வைரசால் 83 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் கலப்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கடந்த 11-ந்தேதி கொரோனாவுக்கு உயிரிழந்தார். அவர் சமீபத்தில் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பி இருந்தார்.
இது இந்தியாவில் கொரோனா வைரசுக்கு ஏற்பட்ட முதல் பலியாகும். இந்த நிலையில் 2-வது பலி நேற்று ஏற்பட்டது.
டெல்லியை சேர்ந்த 69 வயது பெண் கொரோனாவுக்கு பலியானார். அவர் காய்ச்சல், சளி, இருமல் காணப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பலனின்றி இறந்தார்.
அவர் கொரோனா வைரசுக்கு பலியானதாக டெல்லி அரசும், மத்திய அரசும், மத்திய சுகாதார அமைச்சகமும் அறிவித்துள்ளன.
பலியான பெண்ணின் மகன் கடந்த மாதம் இத்தாலி மற்றும் சுவிட்டர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினார்.
அதன்பின் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் அவரது தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 7-ந்தேதி டெல்லி ராம் மனோகர் லோதியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
9-ந் தேதி அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்துள்ள இத்தாலி நாட்டில் இருந்து திரும்பிய மகனிடம் இருந்து டெல்லி பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது.
அப்பெண் ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து உயிரிழந்து விட்டார்.