X

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துக் கொண்ட டொனால்ட் டிரம்ப்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 145-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் மைக் பென்சி மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனரோ பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு அதிபரின் தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினும் பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது பிரேசில் மற்றும் அமெரிக்க அதிபருடன் பஃபியோ வஜ்ஹர்டினுடன் கைகுலுக்கியும், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரேசில் அதிபருடன் நாடு திரும்பிய தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வஜ்ஹர்டினுடன் கைகுலுக்கியும், புகைப்படமும் எடுத்துக்கொண்ட அமெரிக்க டொனால்டு டிரம்பிற்கும் கொரோனா பரவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூடிய விரைவில் கொரோனா பரிசோதனை செய்வேன் என்றார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் வைத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இந்த பரிசோதனையின் முடிவை வெளியிட்ட மருத்துவர் ”அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரவவில்லை’’ எனவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்கள் நாட்டு அதிகாரிகளில் மேலும் சிலருக்கு கொரோனா பரவி உள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியுட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.