கொரோனா வைரஸ் பரவமால் தடுக்க தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய் தாக்கி உயிர் இழந்துள்ளனர். இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி உள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. 29 பேரை இந்நோய் பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒருவருக்கும், ஆக்ராவில் 6 பேருக்கும், இந்தியா வந்துள்ள இத்தாலியைச் சேர்ந்த 16 பேருக்கும், டிரைவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் அரியானாவில் ‘பேடிஎம்’ நிறுவன ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உஷார் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. துறை முகங்கள் வழியாக வரும் பயணிகளும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி வார்டுகளில் டாக்டர்கள், நர்சுகள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதற்காக விசேஷ தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தயாராக உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் வரை சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தயாராக இருக்கின்றன. தேவையான முக கவசங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் உள்ளன.
சளி, இருமலுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 28 பேர் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ரெயில் நிலையங்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தேவையான அளவு மருந்து, மாத்திரை இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து ஓரிரு நாளில் விழிப்புணர்வு குறும்படம் வெளியிட இருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை. கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.
மாஸ்க், மருந்து, மாத்திரை தேவையான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. கொரோனோ வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் இதுவரையில் 10 பேர் சிகிச்சை பெற்று சென்றனர். இதில் ஒருவருக்கும் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
10 டாக்டர்கள், 20 நர்சுகள் மற்றும் பணியாளர்கள் என 24 மணி நேரமும் கொரோனா சிறப்பு வார்டில் தயாராக உள்ளனர். 35 ஆயிரம் முக கவசங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 500 மூன்று அடுக்கு முக கவசங்களும் உள்ளன.
கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தும்மல், இருமல் வரும்போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். சளி, இருமல் உள்ளவர்கள் முக கவசம் அணியலாம். கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
வெளியில் சென்று விட்டு வந்தால் சோப்பு அல்லது கிருமி நாசினிக் கொண்டு 20 நொடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 70 வயதுக்கு மேற்பட்டவர்களை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
தனிநபர் சுகாதாரத்தை பேணி காப்பதன் மூலமே கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். காய்ச்சல், சளி பிரச்சனை உள்ளவர்கள் சிலர் கொரோனா பயத்தால் தாமாக முன்வந்து புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இவ்வாறு டீன் ஜெயந்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் 54 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பற்றிய மக்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்த 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும், உதவி மையமும் இயங்கி வருகிறது.
கொரோனா நோய் அறிகுறி தொடர்பான மருத்துவ உதவிகளுக்கு 104 சேவையிலும், 044-29510400, 044-20510500, மொபைல் போன் 94443-40496, 87544, 48477 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.