சீனாவின் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் சீனாவின் பிற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சீனாவின் வுகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஹூபே மாகாணத்தில் நேற்று மேலும் 100 நபர்கள் பலியாகியுள்ளனர். இதன்மூலம் சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1765 ஆக உயர்ந்துள்ளது.
தினமும் பலர் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் மொத்தம் 70,400 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பகிறது.
கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்திற்கு வெளியே, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருப்பதற்கான அறிகுறி என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்த தொற்றுநோய் எந்த திசையை நோக்கி பரவும் என்பதை கணிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். மேலும் சர்வதேச வல்லுநர்கள் பீஜிங்கிற்கு வந்து இந்த தொற்றுநோய் தொடர்பாக சீன அதிகாரிகளுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.