உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவைவும் விட்டு வைக்கவில்லை. இதன் கொடூர முகம் இந்தியாவிலும் தலைகாட்ட தொடங்கி விட்டது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல்வேறு நாடுகளிலும் நடைபெற இருந்த சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வருகிற 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதி வரை இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் அறிவித்தது. அத்துடன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் ஒருநாள் போட்டி தொடரும் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள். வந்த பிறகு குணப்படுத்துவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவு செய்து எல்லோரும் கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.