கொரோனா வைரஸால் பொருளாதாரத்தில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறைகளும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கிவருகின்றன. இதேபோல் தொழில்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார். குறிப்பாக கடன் வசூலிக்க தடை, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ரிசிர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. பொருளாதார இழப்புகள் தொடர்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடம் கருத்தை கேட்டறிந்துள்ளோம். கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு ரிசர்வ் வங்கி முழுமையாக தயாராகி உள்ளது.
வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பொருளாதார சவால்.
உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) கடந்த 14ம் தேதி, தனது உலகளாவிய வளர்ச்சி கணிப்புகளை வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் பெரும் மந்தநிலைக்கு பின்னர் மிக மோசமான மந்தநிலைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.
கொரோனா எதிரொலியாக நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மையே நிலவுகிறது. மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.
2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை மற்றும் ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜி20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.