கொரோனா மொத்த பாதிப்பு – வெளிப்படையாக அறிவிக்காத மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை மாநில வாரியாக இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த புள்ளிவிவரத்தில் நாடு முழுவதிலும் உள்ள மொத்த பாதிப்பு, குணமடைந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என தனித்தனியாக பட்டியலிடப்பட்டிருக்கும்.
நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை மத்திய அரசு வெளிப்படையாக இணையதளத்தில் அறிவித்தது. ஆனால், இன்று வெளியிடப்பட்ட புள்ளி விவர பட்டியலில், கொரோனா மொத்த பாதிப்பு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. சிகிச்சை பெற்று வருபவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மட்டுமே மாநில வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியைப் போன்று மத்திய அரசும் மொத்த பாதிப்பை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 14,83,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,52,744 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,96,988 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.