Tamilசெய்திகள்

கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி கடந்த மாதம் உச்சத்தை தொட்டது. தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

கொரோனாவை தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு தீர்வு காணும் விதமாக புதிய மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நாடாப்புழுவுக்கு தீர்வாக அமைந்துள்ள மருந்தான நிக்லோஸ்மைடு கொரோனா வைரசுக்கு தீர்வாக அமையுமா என்ற ஆராய்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மேலும் கொரோனா பரிசோதனைக்காக குறைந்த விலையில் ஆர்-கிரீன், ஆர்-கிரீன் புரோ என்ற கருவிகளை தயாரித்துள்ளது.

இதற்கு இந்தியாவில் மருந்து கருவிகளுக்கு அனுமதி அளிக்கும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

மிக குறைந்த விலையில் சானிடைசர்களை தயாரிக்கும் பணியிலும் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 2-வது அலை தீவிரம் அடைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போது ஜாம்நகரில் உள்ள ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பில் ரிலையன்ஸ் ஈடுபட்டது.

முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்களையும் கடந்த ஆண்டு தயாரித்து அளித்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த நிதி ஆண்டில் சம்பளம் பெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக தான் சம்பளம் பெறவில்லை என்று அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் முகேஷ் அம்பானி கடந்த நிதி ஆண்டு பெற்ற சம்பளம் பூஜ்யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய நிதி ஆண்டு அவர் சம்பளமாக ரூ.15 கோடி பெற்றுள்ளார். முகேஷ் அம்பானிக்கு சம்பளம், இதர சலுகைகள், கமி‌ஷன் தொகை உள்ளிட்டவை சேர்த்து 2008-2009-ம் நிதி ஆண்டிலிருந்து ரூ.15 கோடி அளிக்கப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக அவர் வாங்கிய சம்பளம் ரூ.24 கோடி வரையாகும்.

இந்த தகவல்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.