X

கொரோனா பீதி – 31 ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு அரசுத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க. அரசு, “வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நான் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். அதன் விவரம் வருமாறு:-

* தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாட்டில் இருந்து பயணிகள் வருகின்றனர். சில நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை, மத்திய அரசு தடை செய்துள்ளது. எனினும், அந்நாடுகளில் இருந்து இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர் களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.

* அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், உள்நாட்டு பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி, சோதனை செய்திட இந்திய விமான நிலைய ஆணைய இயக்குனரும், பொது சுகாதாரத்துறை இயக்குனரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

* அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்து துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அதை உடனடியாக நடைமுறைப்படுத்திட வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

* தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு தனியார் (ஆம்னி) பஸ்கள் வாயிலாக லட்சக்கணக்கானவர்கள் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அண்டை மாநில எல்லையை ஒட்டியுள்ள சுங்கச்சாவடி (‘டோல் பிளாசா’) அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை செய்ய தேவையான கட்டமைப்புகளை சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும்.

* தனியார் மற்றும் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில், ரெயில்வே, மாநகர பஸ்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் பொது சுகாதாரத்துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பஸ்களையும், மெட்ரோ ரெயில்களையும், தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

* ரெயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அனைத்து ரெயில் நிலையங்களிலும், ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும், ரெயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் சுத்தம் செய்யுமாறு தென்னக ரெயில்வேயின் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, நான் மத்திய ரெயில்வே துறை மந்திரிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளேன்.

* மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

* ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி உள்ள இடங்களில் அவற்றை வாரம் ஒரு முறையாவது கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.

* தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட வரும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என சபாநாயகருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டமன்றத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தலைமைச் செயலகத்திற்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்கவும்.

* மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் 31-3-2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் (10 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி தேர்வுகள், செய்முறை தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள்) திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.

* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.

* அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31-3-2020 வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் (‘மால்ஸ்’), கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் 31-3-2020 வரை மூடப்பட வேண்டும்.

* ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்டது போக, புதிய நிகழ்ச்சிகள் எதுவும் 31-3-2020 வரை நடைபெறுவதை திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

* திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும், குறைந்த அளவில் மக்கள் கூடினால், கொரோனா வைரஸ் பரவுதல் பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

* அதிகமாக கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிக கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த 31-3-2020 வரை அனுமதி வழங்கக்கூடாது.

* அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உள்பட) கேளிக்கை விடுதிகள் போன்றவை 31-3-2020 வரை மூடப்பட வேண்டும்.

* மேற்கூறியவற்றை தவிர பிற அவசிய மற்றும் அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும்.

* கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், பொது நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

* அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில், முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு தேவையான சோப், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்து, பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

* அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையாளர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் தொற்று நோய் சட்டம், 1897 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939-ன்படி பிறப்பிக்கப்பட்ட மேற்கண்ட உத்தரவுகள் மற்றும் நடைமுறைகளை சிறிதும் தவறாது நடைமுறைப்படுத்தி, கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய தங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாக கருதி, வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

* மேலும், சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியார் மற்றும் அரசு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் 31-3-2020 வரை புதிய சுற்றுலா எதையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

* சுற்றுலா பயணியர் தங்குமிடம் அனைத்தும் 31-3-2020 வரை மூடப்பட வேண்டும். சுற்றுலா பயணியர் தங்குமிட உரிமையாளர்கள் எவ்வித முன்பதிவும் 31-3-2020 வரை செய்யக்கூடாது.

* கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்விடங்களில், நோய்த் தடுப்புக்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், ‘தெர்மல் ஸ்கேனர்’ முறையில் பரிசோதித்து, எவருக்கேனும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத்துறையும், சுகாதாரத்துறையும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் நிர்வாகங்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

* யாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால், இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

* பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள், திருமணங்கள் மற்றும் இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றை தவிர்க்குமாறும், தனி மனித சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

* பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

* கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம்.

* பெற்றோர் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியைக் கொண்டு தூய்மைபடுத்திக் கொண்ட பின் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* நோய்க்கான அறிகுறி உள்ள பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

* கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்துகொள்ள சுகாதாரத்துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044 29510400, 044 29510500, 94443 40496 மற்றும் 87544 48477.

மேற்சொன்ன அனைத்து உத்தரவுகளும் 17-3-2020 (இன்று) முதல் நடைமுறைக்கு வரும்.

கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர்ந்து, முழுமையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட இந்த அறிவிப்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.