Tamilசெய்திகள்

கொரோனா பீதியால் தேங்கிய முட்டைகள் – 500 கோடி ரூபாய் இழப்பு

தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பீதியால் தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்கு போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் 3 லட்சத்திற்கும் மேலான லாரிகள் ஓடவில்லை. குறிப்பாக சேலம், சங்ககிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, தேனி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட லாரிகள் சரக்குகள் கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி ஓட்டுனர்கள் வேலை இழந்துள்ளனர்.

சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கல்மாவு, இரும்பு தளவாட பொருட்கள், ஈரோடு மற்றும் திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளிகள், நாமக்கல்லில் இருந்து கொண்டு செல்லப்படும் முட்டைகள், கோழிகள் அனைத்தும் தேங்கி உள்ளன.

இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், மக்காச்சோளம், பருப்பு, தவிடு உள்பட மளிகைப்பொருட்கள் வரத்தும் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் லாரி தொழில் முடங்கி முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது:-

டீசல் விலை ஏற்றம், சுங்க கட்டணம் உயர்வு, வருகிற 1-ந் தேதி முதல் மேலும் காப்பீட்டு தொகை உயர்வு போன்ற பிரச்சினைகளால் லாரி தொழில் முடங்கி உள்ளது. தற்போது வருகிற 1-ந் தேதி முதல் மீண்டும் காப்பீடு கட்டணம் உயர்வு என தகவல் வந்துள்ள நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கத்தால் லாரி தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது.

தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களையும், தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி பொருட்களையும் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கோடிக்கணக்கான முட்டைகள், கறிக்கோழிகள் தேங்கி உள்ளன. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பின்னலாடை தொழில் முடங்கி உள்ளது.

உற்பத்தி பொருட்களை விற்கும் அரசு சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் லாரி தொழில் முழுவதும் முடங்கி உள்ளதால் தினமும் லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 3 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 5 நாளில் ரூ. 15 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன தலைவர் முத்துசாமி மற்றும் துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் ஆகியோர் கூறியதாவது:-

கொரோனா பீதியால் கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி, முட்டை ஆகியவற்றின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.4.50-க்கு விற்பனையான முட்டை தற்போது ரூ.1.50-க்கும், ரூ.80-க்கும் விற்பனையான கறிக்கோழி ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் 15 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. கொரோனா வதந்தியால் முட்டை தொழிலில் இதுவரை ரூ. 500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்காச்சோளம் விலை குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டை தொழிலை பாதுகாக்க விழிப்புணர்வுக்காக முட்டை, கோழி, இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா தொற்று ஏற்படாது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் பீதியால் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்கு யாரும் பொதுமக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பூக்களின் விலை குறைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

உழவர் சந்தையில் வழக்கம்போல் காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க திரண்டு வருவார்கள். ஆனால் கொரோனா பீதியால் உழவர் சந்தையில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் காய்கறி விற்பனை குறைந்ததால் அதன் விலையையும் வியாபாரிகள் குறைத்து விற்பனை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *