Tamilசெய்திகள்

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் – சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. முககவசம் அணியாவிட்டால் அபராதம், தடுப்பூசி போடாவிட்டால் பொது இடங்கள்,
பொழுது போக்கு இடங்கள், வழிபாட்டு தலங்களில் அனுமதி கிடையாது என்ற கடுமையான விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டன.

பேரிடர் காலத்தில் அவசர நிலை கருதி இந்த சட்ட விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.

இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் பாதிப்பு 23 என்ற அளவுக்கு மாறிவிட்டன.

எனவே கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முககவசம் அணிவதை பலர் தவிர்த்து வருகிறார்கள். இனி கட்டாயம் இல்லை என்பதால் முககவசம்
அணிவதை கை விடுவார்கள்.

அதேபோல் தடுப்பூசி செலுத்துவதிலும் மிகவும் ஆர்வம் காட்டமாட்டார்கள். இன்னும் 50 லட்சம் பேர் வரை முதல் தவணை தடுப்பூசிகூட போடவில்லை.

தற்போது தடுப்பூசியும் கட்டாயமில்லை என்று அறிவித்து இருப்பதால் அவர்களை இனி தடுப்பூசி போடும்படி வற்புறுத்த முடியாது.

அதே நேரம் இனி கொரோனா வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லி விடவும் முடியாது. ஏனெனில் சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது.

இதுபற்றி சகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்ட அவசர கால சட்டங்கள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதனால் நமக்கு கொரோனா வராது என்று நினைக்க கூடாது. சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முககவசம்
அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

அதுவே நமக்கு முழுமையான பாதுகாப்பை தரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.