உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் ஒவ்வொரு நாடும் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் உருவான சீனாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரசால் மக்கள் பலியாவது பல மடங்கு அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 145 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நாடுகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 810 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 436 பேர் பலியாகி விட்டனர்.
கொரோனா வைரஸ் பாதித்து தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களில் 6 ஆயிரத்து 82 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இத்தாலி, பிரான்ஸ், ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உயிருக்கு போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா வைரசின் பாதிப்பு மையமாக ஐரோப்பிய நாடுகள் மாறி உள்ளன.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவில் நேற்று 13 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த நோயை வாங்கிக்கொண்ட இத்தாலியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. நேற்று ஒரே நாளில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் 85 பேர் பலியாகி உள்ளனர். இந்த இரு நாடுகளில் மட்டும் நேற்று ஒரே நாளில் 335 பேர் கொரோனா வைரஸ் பாதித்து உயிரை பறி கொடுத்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உலக அளவில் 455 பேர் பலியானார்கள்.
இவர்களில் 335 பேர் இத்தாலி, ஈரான் ஆகிய இரு நாடுகளில் மட்டும் பலியாகி இருப்பது அந்த நாட்டு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நாடுகளை தொடர்ந்து ஸ்பெயினில் நேற்று 47 பேரும், பிரான்சில் 18 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளும் தற்போது கொரோனா வைரசின் அதிகபட்ச பிடியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த 4 நாடுகளும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மிக தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இத்தாலியில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இத்தாலி நாட்டில் உள்ள பொழுதுப்போக்கு மையங்கள், வழிபாட்டு தலங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.
ஈரானில் நேற்று புதிதாக 1,289 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அந்த நாட்டிலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ராணுவம் களம் இறக்கி விடப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசுக்கு பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து அந்த நாட்டில் 2 வாரங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நேற்று 769 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் 930 பேர், தென்கொரியாவில் 217 பேர், சுவிட்சர்லாந்தில் 271 பேர், இங்கிலாந்தில் 208 பேர், நார்வேயில் 196 பேர், பெல்ஜியமில் 197 பேர், ஆஸ்திரியாவில் 143 பேர், சிங்கப்பூரில் 200 பேர், குவைத்தில் 100 பேர், பிரேசில் 151 பேர், மலேசியாவில் 197 பேர், கனடாவில் 198 பேர், ஆஸ்திரேலியாவில் 199 பேர் என உலகம் முழுக்க எல்லா நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தப்படி உள்ளது.
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. நேற்று 3 ஆப்பிரிக்க நாடுகளுக்குள் கொரோனா வைரஸ் நுழைந்து விட்டது. இதனால் உலக அளவில் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது 90 சதவீதம் குறைந்து விட்டது.
விமான சேவைகள் முடங்கி உள்ளன. சுற்றுலாத்துறை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு பயந்து பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதிகளும் முடங்கி உள்ளன. இதனால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார சிக்கலுக்குள் செல்லும் நிலை உருவாகி இருக்கிறது.
சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சி தேக்கத்துக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டால்தான் இத்தகைய சிக்கல்களில் இருந்து மீள முடியும் என்ற நிலை சர்வதேச அளவில் உருவாகி உள்ளது.