மதுரையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிப்பதுபோல், மதுரையிலும் கண்ணுக்கு தெரியாத வகையில் கொரோனாவின் ஆட்டம் சூடுபிடித்து வருகிறது. கொரோனாவின் ஆட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் இருந்தது போல், தற்போதும் படிப்படியாக அதிகரிக்கிறது. நாளொன்றுக்கு 10-க்கும் குறைவாக இருந்த நிலையில், மதுரையில் தற்போது 20-ஐ தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. நகர் பகுதியில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு சரிவர முக கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புறநகர் பகுதியில் இருப்பவர்களை காட்டிலும் நகர் பகுதியில் இருப்பவர்கள் மக்கள் நெருக்கமான இடங்களுக்கு அதிகம் செல்வதால் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் மதுரையில் முககவசம் அணிவதில் அனைவரும் மெத்தன போக்கையே கடைபிடிக்கின்றனர். முக கவசம் அணிவது தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், மதுரையில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க காரணம் அனைவரும் முக கவசம் அணியாமல் இருப்பது தான். இதன் விளைவாக தான் தற்போது கொரோனா படிப்படியாக உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தலைக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவித்த போது பெயரளவில் மட்டுமே தலைக்கவசத்தை மக்கள் பயன்படுத்தினர். அதுபோல தான் தற்போதும் பெயரளவில் மட்டுமே முக கவசத்தை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அணியும் முக கவசத்தையும் சரிவர அணிவதில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒருவர் முக கவசம் அணிந்திருந்தால் அது அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது. எனவே பொதுமக்கள் யாருடனும் பேசும்போது முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேச வேண்டும். முக கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அனைத்து கடை வியாபாரிகளும் அறிவிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அதனை அனைவரும் சரிவர கடைபிடிப்பதில்லை.
தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளதால் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களும் பெயரளவிற்கே முக கவசம் அணிகின்றனர். முக கவசம் கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா பரவலை மீண்டும் கட்டுப்படுத்த முடியும். முக கவசம் என்பது வாய், மூக்குப்பகுதியை முழுமையாக மூடும் வகையில் இருக்கும். ஆனால், நம்மில் பலர் அந்த முக கவசத்தை வாய்ப்பகுதியை மட்டுமே மூடுகின்றனர். இதுபோல் சரிவர முககவசம் அணியாமல் இருந்தாலும் கொரோனா உடனடியாக தாக்கும். விழிப்புணர்வுடன் இருந்தால் கொரோனாவின் இரண்டாவது அலையை சந்திக்காமல் இருக்கலாம் என்றனர்.