கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் இன்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்து உள்ளது. நேரடியாக வழக்குகள் விசாரணை நடந்தாலும், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுநல வழக்குகளை தொடுத்து நேரடியாக ஆஜராகுபவர்கள் உள்ளிட்டவர்கள் முடிந்தவரை கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், கோர்ட்டு அறைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அதே போல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெற்றது.