X

கொரோனா பரவல் எதிரொலி – மார்க்கெட் பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க மாநகராட்சி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மக்கள் அதிகமாக கூடுகின்ற 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் முதல் தி.நகர் ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், புரசைவாக்கம் கடை வீதி, கொத்தவால் சாவடி மார்க்கெட், என்.எஸ்.சி.போஸ் ரோடு, அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் செயல்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

மேலும் அந்த பகுதிகளில் செயல்பட்ட டாஸ்மாக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. பாரிமுனையில் உள்ள மிண்ட் தெரு, திருவல்லிக்கேணி பாரதிசாலை, அமைந்தகரை, செனாய்நகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்ட 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

அதே போல மேற்கு தாம்பரத்தில் செயல்பட்ட 3 மதுக்கடைகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மக்கள் அதிகமாக கூடக்கூடிய இந்த பகுதிகளில் செயல்பட்ட 7 மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கடைகளில் விற்க இருந்த மதுபானங்கள் அருகில் இருந்த கடைகளுக்கு மாற்றப்பட்டு உள்ளது. மது பிரியர்களும் அருகில் உள்ள கடைகளை நாடினார்கள்.

சென்னையில் 40 எலைட் மதுபான கடைகள் மால்களில் செயல்பட்டு வந்தன. கொரோனாவை தடுக்க அரசு எடுத்த திடீர் நடவடிக்கையால் இந்த எலைட் மதுபான கடைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.