கொரோனா பரவல் எதிரொலி – சென்னையில் சிக்னல் காத்திருப்பு நேரம் குறைப்பு
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் மீண்டும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்த நெரிசல் மற்றும் சிக்னல் காத்திருப்பு காரணமாக வாகன ஓட்டிகள் ஒருவருடன் ஒருவர் ஒட்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 10 போக்குவரத்து சிக்னல்களில் சோதனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள 400 சிக்னல்களிலும் அமல்படுத்த போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.