உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த கொடி நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியது. 2020 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இந்த வைரஸ் ஒரு தொற்று நோய் என உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டது.
இதனால் உலகம் நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது. இருந்தாலும் 2-வது அலை, 3-வது அலை, 4-வது அலை என தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளின் செயல்திறனை குறைத்து அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதற்கிடையே சீனாவின் வுகான் ஆய்வு மையத்தில் இருந்துதான் வைரஸ் தொற்று பரவியது என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் சீனா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது. வல்லுனர்கள் சீனா சென்று ஆய்வு செய்தனர். அப்போது சீனா கட்டுப்பாடுகளை விதித்தது.
இதுவரை கொரோனா எங்கு தோன்றியது என்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை. சீனா மீது தொடர்நது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார மையம் தற்போது சீனாவுக்கு சற்று அழுத்தம் கொடுத்துள்ளது.
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை வெளியிட வேண்டும். கொரோனாவின் தோற்றத்தை கண்டறியும் வரை கடினமான நாட்களை கடந்துதான் ஆக வேண்டும் என சீனாவை உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.