Tamilசெய்திகள்

கொரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு

மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் காப்பீட்டுக் கழக கணக்கில் இருந்து (இ.எஸ்.ஐ.சி.) அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் அந்த ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி உயிரிழந்த தொழிலாளரை சார்ந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.சி. வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் விவரங்களையும் அவர் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும் அத்தொழிலாளர் இ.எஸ்.ஐ.சி. கணக்கில் குறைந்த பட்சம் 78 நாட்களுக்கு வரவு வைத்திருக்க வேண்டும். நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு தினசரி ஊதியத்தில் சுமார் 90 சதவீதமானது ஓய்வூதியமாக வழங்கப்படும்.

கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இ.பி.எப்.ஒ.) செயல்படுத்தி வரும் வைப்புத்தொகை சார்ந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச தொகையானது ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் இத்திட்டத்தால் பலன் அடைய முடியும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பதற்கு முன் ஓராண்டுக்கு ஒரே நிறுவனத்தில் மட்டுமே பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது அந்த விதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிரிழந்த தொழிலாளர் முந்தைய ஓராண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து இருந்தாலும் அவர்களின் குடும்பத்தினர் இத்திட்டத்தின் கீழ் பலன் அடைய முடியும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் சலுகைகளை வழங்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் எந்தவித அச்சமுமின்றி இருக்க முடியும்.

தொழிலளார்களுக்கு எந்தவித நிதிச்சுமையையும் ஏற்படுத்தாமல் இந்த கூடுதல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.