கொரோனா தொற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் – சவுரவ் கங்குலி அறிவிப்பு
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இத்தாலியைச் சேர்ந்த 16 சுற்றுலா பயணிகள் உள்பட 31 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மத்திய அரசும், டெல்லி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் வருகிற 29-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் மூலம் ஐபிஎல் போட்டி நடக்குமா? என்ற அச்சம் நிலவி வருகிறது.
ஆனால், ஐபிஎல் போட்டி நடந்தே தீரும், வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வைரஸ் தொற்றாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டி குறிப்பிட்ட தேதியில் தொடங்கும். எல்லா இடங்களிலும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து ஏற்கனவே இலங்கை சென்று விளையாடுவதை உறுதி செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா இந்தியா வர இருக்கிறது. அங்கே எந்த பிரச்சினையும் இல்லை.
கவுன்ட்டி அணிகள் உலகின் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்கின்றன. அவைகள் அபு தாபி, ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று விளையாடுகின்றன. ஆகவே, எந்த பிரச்சினையும் இல்லை.
நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். கூடுதலாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. மருத்துவக்குழு இதுகுறித்து எங்களுக்கு தெரிவிக்கும். மருத்துவக்குழு ஏற்கனவே மருத்துவமனைகளுடன் தொடர்பில் உள்ளது. ஆகவே எல்லாம் கிடைக்கும் வகையில் உள்ளது. டாக்டர்கள் என்ன கூறுகிறார்களோ, அதை செய்வோம்.
மருத்துவம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் மருத்துவக்குழு மூலம் ஆராய்வோம். ஒவ்வொரு தொடரும் நடைபெறும்’’ என்றார்.