கொரோனா தடுப்பூசி விவகாரம் – அமெரிக்காவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க ஜோகோவிச்சுக்கு தடை

சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் துபாய் ஓபன் டென்னிசில் அரையிறுதியில் தோற்ற போதிலும் ஜோகோவிச் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் முதலிடத்தில் இருப்பது இது 379-வது வாரமாகும். அதிக வாரங்கள் முதலிடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.

இந்நிலையில், இண்டியன்வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் முறையே வருகிற 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையும் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைக்காததால் ‘நம்பர் ஒன்’ வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் தனக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.

இதையடுத்து அவர் இந்தப் போட்டியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொள்ள மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதேபோல் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியையும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools