கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – பிரதமர் மோடி
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 8 மணிக்கே எம்பிக்கள் பாராளுமன்றத்திற்கு வரத் தொடங்கினர்.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். நாடு ஒன்றுபட்டு ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.