கொரோனா தடுப்பூசி வாங்க கேரள அரசுக்கு ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கிய பீடி தொழிலாளி
கேரள மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 27 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரத்து 378 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வாங்கும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அம்மாநில மக்கள் ஏராளமானோர் நிதி வழங்கி வருகிறார்கள். கேரளாவிலிருந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்தும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயதான பெண்மணி ஒருவர் தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்று ரூ.5 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதியை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் கன்னூர் பகுதியை சேர்ந்த பீடித் தொழிலாளி சாலடன் ஜனார்த்தனன் வங்கியில் சேமித்து வைத்திருந்த தொகையில் ரூ.2 லட்சம் நிதியை கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இது அவர் வங்கியில் சேமித்த மொத்த பணத்தில் 99 சதவீதம் ஆகும்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எனது சேமிப்புகளை விட எனது சகோதர சகோதரிகளின் உயிரே முக்கியம். நான் பீடி சுற்றி அதில் வரும் வருமானத்தில் பிழைத்து கொள்வேன்” என்று உருக்கமாக தெரிவித்தார்.
இதுபோல் கேரள போலீசில் பணியாற்றிய ராஜேஷ் மணி மாலா என்பவர் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவி செய்தவர்களை ஓவியமாக வரைந்து தருவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் கேரள மாநில மக்கள் அங்கிருந்து ஏராளமான தொகைகளை முதல்வர் நிவாரண நிதிக்காக அனுப்பி வருகின்றனர். இருந்தும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அம்மாநில மக்கள் நிதி அளித்து வருகிறார்கள்.
இதுபோல் கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே. மணி தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்த தொகையில் ரூ.50 ஆயிரத்தை வழங்கியிருக்கிறார்.