கொரோனா தடுப்பூசி எப்போது தயாராகும்? – உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதில்
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதற்கிடையில், உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் சோதனை இறுதிகட்டத்தில் உள்ளது.
9 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை முயற்சியில் உள்ள நிலையில் சோதனை வெற்றியடையும் பட்சத்தில் இந்த தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பு மூலம் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 மில்லியன் மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.