Tamilசெய்திகள்

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்! – மத்திய அரசு விளக்கம்

கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசிபோட்ட பின்னர்தான் ‘பூஸ்டர் டோஸ்’ பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் மூத்த அதிகாரியும், தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவருமான டாக்டர் என்.கே. அரோரா, செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:-

இங்கே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைவருக்கும் முழுமையாக (2 டோஸ்) வழங்குவதில்தான் முதன்மையான கவனம் செலுத்தப்படுகிறது. இது வரை பூஸ்டர் டோஸ் பற்றி விவாதிக்கவே இல்லை. அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி என்ற முதன்மையான நோக்கம் நிறைவேறிய பின்னர்தான் பூஸ்டர் டோஸ் பற்றி கவனத்தில் கொள்ளப்படும்.

தடுப்பூசி பெற்ற பின்னர் தனிநபருக்கு பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகிறது.   தடுப்பூசி  போட்டுக்கொண்டுள்ள தனி நபர்கள் இடையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பின்பற்றப்பட வேண்டுமா என்பதை ஆய்வுகள் மட்டுமே வழி நடத்தும்.

தடுப்பூசிக்கு பிறகு பொதுவான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகிறது. அதே நேரத்தில் ‘டி’ செல்நோய் எதிர்ப்புசக்தியும் உள்ளது. எந்த எதிர்ப்புச்சக்தி இழக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பது கடினம். அறிவியல் சான்றுகள் மட்டுமே இதுபோன்ற முடிவுகளுக்கு வழிநடத்தும். இப்போதைக்கு, அனைவருக்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்டபடி தடுப்பூசிகளை போடுவதுதான் எங்களது முன்னுரிமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் அமெரிக்காவில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அந்தநாட்டின் எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பைசர்-பயோ என்டெக், மாடர்னா தடுப்பூசிகளின் மூன்றாவது டோசுக்கு (பூஸ்டர் டோஸ்) இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்தியாவில்  கோவிஷீல்டு  தடுப்பூசியை தயாரித்து வழங்கும் இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ்பூனவாலா, தடுப்பூசியால் பெறப்படுகிற நோய் எதிர்ப்புச்சக்தி 6 மாதத்தில் போய் விடும் என்பதால் மூன்றாது டோஸ் தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.