X

கொரோனா தடுப்பூசிக்கு மாநில அரசு நிதியில் இருந்து செலவு செய்வோம் – புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாய விளைபொருட்களுக்கு குறைவான விலை கொடுக்கப்பட்டதாக மத்திய வேளாண்துறை மந்திரி தெரிவித்து இருப்பது தவறானது.

அப்போது நெல்லுக்கு 126 சதவீதமும், கோதுமைக்கு 87 சதவீதமும், பருப்பு வகைகளுக்கு 115 சதவீதமும் விலை உயர்வு கொடுக்கப்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியில் நெல்லுக்கு 43 சதவீதமும், கோதுமைக்கு 41 சதவீதமும், பருப்பு வகைகளுக்கு 69 சதவீதமும்தான் விலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நாராயணசாமி கூறுகையில், ‘புதுவையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தொற்று பாதித்தவர்களில் 97.30 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். மாகி பகுதியில் தற்போது பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அங்கு மருத்துவ அதிகாரிகள் செல்ல அறிவுறுத்தி உள்ளோம். கொரோனா தடுப்பு மருந்து விரைவில் கிடைக்கும் என்றும், முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியுள்ளார். புதுவையில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்கவேண்டும். இல்லாவிட்டாலும் மாநில அரசின் நிதியில் இருந்து செலவு செய்வோம்’ என்றார்.