உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த அடியை ஏற்படுத்தி இருக்கிறது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.
அதேநேரம் இந்த நெருக்கடி காலத்திலும் கணிசமான செல்வந்தர்கள் தங்கள் வளத்தைப் பெருக்கி வருகின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்திய செல்வந்தர்கள் மாறியிருக்கின்றனர்.
அந்தவகையில், கடந்த 2018-ம் நிதியாண்டில் ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை வெறும் 77 ஆக இருந்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த 2020-ம் நிதியாண்டில் இது 141 ஆகவும், 2021-ம் நிதியாண்டில் 136 ஆகவும் இருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த தகவல்களின்படி இந்த எண்ணிக்கை தெரிய வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.