உலக தங்க கவுன்சிலின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக தங்க கவுன்சில் அறிக்கைப்படி, தங்கம் இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறையவில்லை.
இந்தியாவின் தங்கத்தின் தேவை கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 2-வது காலாண்டில் 76.1 டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 19.2 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனுடைய மதிப்பு ரூ.32 ஆயிரத்து 810 கோடியாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.26 ஆயிரத்து 600 கோடியாக இருந்தது. ஆபரணங்களின் தேவை கடந்த ஆண்டை விட தற்போது 25 சதவீதம் அதிகரித்து 55.1 டன்னாக உயர்ந்து உள்ளது. இதனுடைய மதிப்பு கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 750 கோடியாக உள்ளது. தங்க கட்டிகளில் முதலீடு 21 டன்னாக உள்ளது.
முதலீட்டுக்கான தேவையும் 6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், மறுசுழற்சி செய்யும் தங்கத்தின் அளவு 19.7 டன்னாகும். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 120.4 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு வெறும் 10.9 டன் மட்டுமே இறக்குமதியானது.
ஜனவரி முதல் ஜூன் வரை அரையாண்டு காலத்தில் ஆபரணம் மற்றும் முதலீடுக்கான தங்கத்தின் அளவு 216 டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு 166 டன்னாக இருந்தது. இதனுடைய நடப்பாண்டின் மதிப்பு ரூ.91 ஆயிரத்து 690 கோடியாகும். கடந்த ஆண்டு ரூ.64 ஆயிரத்து 180 கோடியாகும். அட்சயதிரிதியை, திருமணங்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளால் ஊரடங்கு காலத்திலும் தங்கத்தின் தேவை 19.2 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது.
வரும் காலங்களிலும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் வரவிருப்பதால் தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் முதலீடுகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலை அதிகரிப்பால் வெளிநாடுகளில் இருந்து கடத்தலும் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க வரி முறைகளிலும் மாற்றம் கொண்டு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.