Tamilசெய்திகள்

கொரோனா காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம்

கொரோனா காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியாலும், நிதிச்சுமையாலும் பலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். தனி நபர்களும், நிறுவனங்களும் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்த கொரோனா காலத்தில் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்துவதில் மத்திய அரசு சலுகை அளித்து இருந்தது. ஆகஸ்டு மாதம் வரை இ.எம்.யை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

தவணை செலுத்தாத காலத்தில் சில வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன. இதற்கிடையே கடன்களுக்கான தவணையை நீட்டிக்க கோரியும் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

ஊரடங்கில் தவணையை திருப்பி செலுத்தாத நபர்களுக்கு வங்கிகள் விதித்த வட்டிக்கு வட்டியை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இதுதொடர்பாக நீதிபதிகள் அசோக்பூ‌ஷன், சுபாஷ்ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா கால வங்கிக் கடன் தவணை சலுகையை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது. இந்த காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாங்கள் பொருளாதார ஆய்வாளர்கள் அல்ல, இருக்கும் நிலைமையை பார்த்துதான் முடிவு செய்ய முடியும். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கொள்கையில் நாங்கள் தலையிட முடியாது.

கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டி வசூலித்து இருந்தால், திருப்பி தரப்பட வேண்டும்.

வங்கிக்கடன் தவணைகளை திருப்பி செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.